Sunday, February 20, 2011

குழந்தை தொழிலாளி

உலகம் எங்கும் தீபாவளி, விண் எங்கும் வண்ணங்கள்,
மத்தாப்புக்கள், சர வெடிகள் , தரை சக்கரம் என
புதிதாக பல வகை வெடிகள்
அதிசயமாய்ப் பார்த்தாள், ஐந்து வயது அஞ்சலை,
அமைதியாய் அண்ணாந்து பார்த்து
பெருமையாய் அம்மாவிடம் கூறினாள்,
"அம்மா இதெல்லாம் நான் தான் செய்தேன்".........

ஒரு முறை நீயும் வாராய்

கண்ணா, நீயும் மறுபடி வாராய்
வந்தென் ஐயம் ஒரு முறை கேளாய்,
என்ன பார்க்கிறாய்?
சட்டை பை முதல் சாக்கு பை அளவிற்கு வித விதமாய்,
கீதை என்ற ஒரே புத்தகத்தை எழுதிய கில்லாடி,
உன்னை தான் ! !

எந்தன் அன்னை,
அவளுடை அழகிய உடலை வருததி
எங்கோ சுழலும் கிரகங்கள் எண்ணி,
திங்கட் தோறும் நோன்பிருந்து,
நாள் முழுதும் உன் புகழ் பாடி,
என்றோ நீ திருடி தின்ற வெண்ணை குறித்து
இன்றும் அளவளாவி மகிழ்ந்தனள்.
அன்று நீ உடைத்த கலயம் பற்றி கவலைப்படவில்லை,
வீணான வெண்ணை எண்ணி வருந்தவுமில்லை

எனின்,
எவருக்கும் துன்பம் தராமல்,
யாருக்கும் தெரியாமல் ஒருமுறை
ஒரே ஒருமுறை அப்பா பையிருந்து
மிட்டாய் வாங்க எடுத்த ஐம்பது காசிற்கு,
உடல் சிவக்க நையப் புடைத்து
உன் முன் மன்னிப்பு கேட்க சொன்னார் !
நான் செய்தால் பாவம்,
நீ செய்தால் லீலையா?
ஒரு வேளை, நீ திருடர்களுக்கெல்லாம் அரசனா?
அதனால் தான் நீ செய்த பிழைகளும் போற்றபபடுகிறதா?
சுயநலம் வேண்டி நியாயத்தை வளைக்க
நீ என்ன ஜாதி கட்சி தலைவரா?
இல்லை, இந்திய அமைச்சரா?
ஐந்தலை பாப்பின் மடியில்
சுகமாய் உறங்கியது போதும்,
ஒரு முறை நீ ஓடி வாராய்....
நியாயம் வேண்டி நீதி போதித்த
ஆசானிடம் மெதுவாய் குறை கூறினேன் !
சிறுவன் என்றும் பாராமல்,
சுருக்கென்று பிரம்பால் புடைத்தார்

உன் அன்னை யசோதாவோ
உன் மலர் மேனி போர்த்திய தோல் துப்பும்
வியர்வைக்கும் வலிக்காமல் அடிப்பார்,
என்னுடை பிரம்படி எப்படித் தெரியுமா?
பாலில் கலந்த சர்க்கரை, முழுதும் கரைந்து, பின் எஞ்சியது
அடியில் தங்குவது போல்,
தொடையில் விழுந்த அடியின் வலி,
உடல் முழுதும் படர்ந்து , பின்
குருதி செல் நரம்பும் தசையும் தாண்டி,
என்பு வரை வலிக்கும் !

ஞாயிறுதோறும் "மகாபாரதம்" நாடகத்தில்
வைகுண்டதில் படுத்து சிரிப்பது பார்த்தேன்,
ஒரு முறை பிரம்படி வாங்கினால் புரியும் ,
உன் வைகுண்ட புன்னகை எல்லாம்,
அரசியல் வாக்குறுதிகள் போல் காற்றில் பலந்து காணாமல் போய் விடும்,
எனக்கு வேண்டி, செல்ல கண்ணா
ஒருமுறை பூமிக்கு வாராய்,

ஆனால், நான் புத்திசாலி,
நீ என்ன சொல்வாய் என்று எனக்கு தெரியும்,
" நண்பா, குமுறாதே , சற்று பொறு,
அடுத்த யுகத்தில், உன்னையும் கடவுளாக்கி
உன் ஐம்பது காசு திருட்டு குறித்து
வேறொரு அன்னை விரதம் இருப்பாள்"
ஹா ஹா ஹா

Saturday, February 12, 2011

அன்பே !
உள்ளொன்று புறமொன்று இருந்தால்
வஞ்சன் என்பார்கள்,
நானும் அப்படி தான்
உள்ளே நீ.
வெளியே நான்