Saturday, September 17, 2011

அன்னை

சிப்பிக்குள் முத்தாகிப்  , புளியிட்ட  செப்பாகி,
மண்ணுக்குள் பொன்னாகி, மண்ணிலே பெண்ணாகிப்  பிறந்து,
எனை வளர்க்க உனை கரைத்து,
தியாகியாகி, எந்தன் ஆசானாகி,
அன்பாகிப்  , பண்பாகிப்  , பிறர் போற்றும் ஒளி விளக்காகி
நல்வழி காட்டும் ஒளியாகி
உடையவனுக் குடனாகி, ஈன்றவன் தாயாகி,
கற்பிர்க்கு அணியாகி, ஒப்பிலா மணியாகிச்  சிறந்த நுன்,
தாளணியாகி, அதிலும் தூளாகி வந்த மண்னும்,
 என்  நெற்றி திலகமாகி திகழாதோ !
என் எல்லாப் பிறப்பிலும்
உன் வயிற்று சுமையாகி
மகனாகிப் பிறக்கும் பேறை
எனக்கு அவ்வொப்பிலா இறைவன் அருள மாட்டானா?

அழகு

தமிழை அழகு என்றோம்
தமிழ் தந்த கடவுள்,
முருகனை அழகு என்றோம்
அன்பே,
நீ அழகு என்றதால்
உன்னை தமிழ் என்றேன் நான்

நீ என்னை காதலித்தால்

உலகில் பிறந்த சந்தனம் எல்லாம்
ஒன்றாய் இழைத்து ஆண்டவன்
உன்னை படைத்தானோ 
ஆயிரம் சிப்பிகள் மது உண்டு முத்து உமிழினும்
இணை ஆகுமோ உன் மல்லிகை மொட்டு பற்க்ளுக்கு

பொன் வேண்டி ஏன் மண்ணை தொண்டுகிறார்
புவியின் பொன் அனைத்தும், சிலையாய், பெண்ணாய்
உன் வடிவில் நிற்கிறதே

இறைவனின் மல்லிகை தோட்டத்தில்
விளைந்த விண்மீன்கள் யாவையும்
உன் வட்ட விழிக்குள் வைத்தாயோ?

உன் சுவாசத்தை சுவாசித்த பின்
மூச்சு விட மனசு இல்லையே

விடியலில்,
கமலங்கள் மலர்வதும், பறவைகள் பறப்பதும்
கதிரோன் கண்டு என்றல்லவா நினைத்தேன்
உன்னை கண்டபின் உணர்ந்தேன்
அவை யாவும், நீ துயில் எழும் அழகைக்  காண என்று !

இயம்ப இயலா அழகை கண்டு
இயற்கை என வியந்தோம்,
அந்த இயற்கையும் வியக்கும் நுன்னை என்னென்று விளம்ப...

தித்திக்கும் மலை தேனே, திகட்டாத அமுதே,
இப்படி எல்லாம் உன்னை
சத்தியமாய் கவிதை பாடுவேன்,
நீ மட்டும் என்னை காதலித்தால்

இழப்பு

மாலை முல்லை மலரும் வேளை,
காலை கதிரவன் மறையும் வேளை,
கதிரவன் கண்ட கமலம் போல்
என் உதிரம் கலந்த நாயகி நினைவுகள்,
சோலை மலர் நடுவில் மலர்கையில்,
பாலை பறவை போல் தவிக்கும் என் உள்ளது
நாயகி, என்னை மறந்து,
பள்ளம் மேடு கடந்து கொண்டவனோடு
வீதியில் உலா வருவது கண்டேன்
வெண் துகிலில் இட்ட கரும்புள்ளி போல்
என் வாழ்வில் வந்தவளை மறந்து,
புதிய வாழ்வு தொடர,
மற்றொரு நாயகி, என்னுள்ளம் ஏறினாள்,
அவளும் மண்ணில் சிந்திய நீர் போல்,
என்னை பிரிந்து செல்ல,
இவ்வுலகத்துடன் பிரியா உறவுடை
இயற்கை பெண்ணை காதலித்தேன்,
வாழ்வின் வஞ்சனையோ,
நிலையிலா இன்பம் வேண்டி, மனிதன்
அவளையும் அழிக்க துவங்கி விட்டான்,

இழப்பு என்பது எனக்கு மட்டும்
என் அகராதியின் எல்லா பக்கததையும் அலங்கரிக்கிறதோ?

இறைவன் எங்கே

அறிவியலும் இறைமையும் ,
அறியாமையால் அறியாத பேதை நான்,
அன்னை மடி பிறந்து
முலையமுது உண்ட  அனைத்து உயிர்க்கும்
முதலில் தோன்றி, இடையில் மறந்து,
முடிவில் மறையும் நிரந்தர கேள்வி,
"இறைவன் யார், எங்கு இருக்கிறான்?"
என் மதியிலும் துளிர்த்ததை
மெதுவாய்க் கேட்டேன், சான்றோர் ஒருவரிடம் !

கதிரவன் அறிவும், மதியின் சாந்தும் கொண்டு,
பசுமை வெற்றிலையாய்ப் பளிச்சித்ட அவர் முகம்,
பாக்கொடு பல்லிடை அரைத்த
வெற்றிலையாய்ச் சிவந்து, பின் சினந்து கூறினார்,
"மூடனே, இறைவன் எங்கும் உள்ளார்"

பாவம் !
அவர்  என்னுள்ளும் உள்ள
இறைவனைக் காண மறந்தார் போலும் !

ஹைக்கூ

விண்மீன்கள்



இறைவனின் குழந்தை அளைந்து எறிந்த சோற்று பருக்கை  !!



காலை பறவை வேண்டி வானத்து தேவதை தூவிய தானியம் !!